×

பொதுமக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காண 1100 எண் தொலைபேசி சேவை திட்டம் தொடக்கம்: 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்

சென்னை: பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிடம் 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் `முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டம்’ துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள்  குறைகளை அரசிற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மூலம் தெரிவிக்கும் வகையில் சென்னை, சோழிங்கநல்லூர் ராஜிவ் காந்தி சாலையில் 12 கோடியே 78 லட்சம் செலவில் 100 இருக்கைகளுடன் முதலமைச்சரின் உதவி அழைப்பு  மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமில்லா  தொலைபேசி எண் 1100 வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்கள் குறைகளை அரசிற்கு 24 மணி நேரமும் CMHelpline.tnega.org என்ற இணையதளம் வாயிலாகவும், cmhelpline@tn.gov.in என்று மின்னஞ்சல் வாயிலாகவும்,  CMHelpline Citizen என்ற கைப்பேசி செயலி வாயிலாகவும், https://twitter.com/cmhelpline_tn என்ற டிவிட்டர் வாயிலாகவும் https://www.facebook.com/CM-Hepline-TN என்ற பேஸ்புக் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் மூலமாக பல்வேறு அரசு துறைகளுக்கான குறைகளை மனுதாரர் ஒரே தளத்தில் பதிவு செய்யலாம். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி, குறைதீர்க்கும் முகாம், இணையதளம், சமூக ஊடகங்கள், கைப்பேசி  செயலி, மின்னஞ்சல் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது இந்த திட்டத்தின் வாயிலாக குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தில் பொதுமக்களின் குறைகளை விரைந்து களைந்திட அவர்களின் ஆதார் எண்  அல்லது குடும்ப அட்டை எண்ணை அவசியம் தெரிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு உரிய வேலைவாய்ப்பு பெற்றிட வழிவகை செய்யப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ்  பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏற்பு, நிராகரிப்பு, மனுவின் தற்போதைய நிலை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர், தலைமை செயலாளர்  உள்ளிட்ட அனைத்து துறை அரசு செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களால் வரையறுக்கப்பட்ட  காலத்திற்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னாளுமை  முகமையின் ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை திட்டத்தின் சிறப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : public , 1100 hotline service scheme for immediate redressal of grievances of the public
× RELATED செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்